சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TamilNadu Dr. J. Jayalalithaa Fisheries University—TNJFU) தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 6 உறுப்புக் கல்லூரிகளில் மீன்வள அறிவியலில் 120 இடங்கள், மீன்வளப் பொறியியலில் 30 இடங்கள், ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் பொறியியலில் 20 இடங்கள், மீன்வள உயிர் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தில் தலா 40 இடங்கள் என மொத்தம் 250 இடங்கள் உள்ளது.
மேலும், மீனவ சமூக மாணவர்களுக்கென மீன்வள அறிவியலில் 24 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையின்போது குறைவான மதிப்பெண் பெற்றவர்களை சேர்த்துள்ளதாக புகார்கள் அரசிற்கு வந்தன. அதன் அடிப்படையில், அரசு ஆய்வு செய்தபோது முறைகேடாக மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கியது கண்டறியப்பட்டது.
அதன் அடிப்படையில், 2019 முதல் மாணவர்கள் சேர்க்கை குறித்து விரிவான விசாரணையை நடத்துவதற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் எஸ்.பழனிசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளநிலை உதவியாளர், அப்போது மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவராக இருந்தவரும், தற்போதைய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான ஜவகர் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுகுமார் கூறும்போது, ''இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்களிடம் கடந்த 2020 - 2021ஆம் ஆண்டு முதல் மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சேர்க்கை வழங்கி உள்ளனர். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதலாம், 2ஆம் ஆண்டு ,3ஆம் ஆண்டில் படித்து வந்த மாணவர்கள் 37 பேர் முறைகேடாக சேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இளநிலை மீன்வள அறிவியல் (பிஎப்எஸ்சி ) பாடப்பிரிவில் சேர்வதற்கு மாணவர்கள் பணம் கொடுத்து இடங்களை தேர்வு செய்துள்ள தகவலின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தில் குழு அமைத்து விசாரணை செய்தோம். அப்போது 2020 - 2021ஆம் ஆண்டில் 2 மாணவர்களும், 2021 - 2022ஆம் ஆண்டில் 13 மாணவர்களும், 2022 - 2023ஆம் ஆண்டில் 22 மாணவர்களும் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு முறைகேடாக சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை நேரில் சமர்பிக்க வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளோம். அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களை மாணவர்கள் சமர்பிக்க காலக்கெடுவும் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை அரசிற்கும் அளித்துள்ளோம்.
முதல்கட்ட விசாரணையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் இருந்த மதிப்பெண்களில் மாற்றம் செய்து, அவர்களுக்கு இளநிலை உதவியாளர் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவு கடிதங்களை போலியாக தயார் செய்து அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்றின்போது மாணவர்களை நேரடியாக அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தாமல் ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. கலந்தாய்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அப்போது கலந்தாய்வு பணியில் இருந்து இளநிலை உதவியாளர் மாணவரின் கட்-ஆப் மதிப்பெண்களை கணினியில் திருத்தம் செய்து போலியாக சேர்க்கை கடிதங்களை தயார் செய்து அளித்துள்ளார். அதன் அடிப்படையில், மாணவர்களை கல்லூரியில் சேர்த்துள்ளனர். மேலும் மாணவர் சேர்க்கைக்குழு சரியாக கவனிக்கவும் தவறி உள்ளனர்.
கலந்தாய்வில் மாற்றம்: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேட்டின் காரணமாக, நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கையின்போது சான்றிதழ் சரிபார்ப்பு மிகவும் கவனமாக நடத்தப்படும். மாணவர்களின் சான்றிதழ் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் மீண்டும் ஆய்வு செய்யப்படும்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடப்பாண்டில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய அளித்த தகவல்கள் மற்றும் சான்றிதழ்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வின்போது மாணவர்கள் தேர்வு செய்யும் படிப்பிற்கான தற்காலிக ஒதுக்கீடு மட்டும் பாடப்பிரிவு, கல்லூரி ஆகியவற்றை குறிப்பிட்டு அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்களை நேரடியாக அழைத்து அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படும். அந்த உண்மைத்தன்மையின் அடிப்படையில் மட்டுமே, மாணவருக்கு அளிக்கப்பட்ட கல்லூரிக்கான இடம் உறுதி செய்யப்பட்டு வழங்கப்படும்.
மாணவர்களின் உண்மை சான்றிதழ்கள் மற்றும் கட்டணம் பெறப்பட்டு, பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரிக்கு வழங்கப்படும். இதனால் முறைகேடு நடைபெறாது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்குழு அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: TNJFU: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் முறைகேடு? அடுத்தடுத்து சஸ்பெண்ட்.. நடப்பது என்ன?