சென்னை: குடிநீர் வழங்கல் வாரியம் பெருநகரப் பகுதிகளில் சுமார் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் ஏறக்குறைய 80 லட்சம் இணைப்புதாரர்களுக்கு குடிநீரை வழங்குகிறது. மேலும் அரசு நிறுவனங்கள் குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு குடிநீர் வாரியம் தேவையான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 870 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை பெறுகிறது. ஆனால் தற்போது நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மெட்ரோ வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆன்லைனில் பதிவு செய்து குடிநீர் பெறும் நுகர்வோரின் எண்ணிக்கை பெரிதளவில் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.
நீர் திறப்பு
முன்னதாக மெட்ரோ குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் போதுமான நீர் இல்லையெனில், ஆன்லைனில் பதிவு செய்து தண்ணீரை பெற்றுக் கொள்வார்கள். மேலும், இவர்கள் வாங்கும் தண்ணீர் அளவை பொறுத்து பணத்தை செலுத்த வேண்டும். அதன்படி 6,000 லிட்டர், 9,000 லிட்டர், 1,200 லிட்டர் திறன் கொண்ட ஒப்பந்த லாரிகள் தண்ணீரை நீரேற்றம் செய்து ஆன்லைனில் பதிவு செய்த நுகர்வோர் வீட்டுக்கே நீரை கொண்டு சென்று விநியோகம் செய்வதுண்டு என மெட்ரோ வாரிய அலுவலர்கள் கூறினர்.
இதற்கிடையே குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளின் பயணம் சென்னையில் குறைந்துள்ளதாக, குடிநீர் வாரிய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய நாள்களில் ஒரு நாளைக்கு ஒரு லாரி 10 முறை குடிநீரை நீரேற்றம் செய்து குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வதுண்டு. ஆனால் நல்ல நீர் இருப்பினால் தற்போதைய நிலவரப்படி இரண்டு அல்லது மூன்று முறைதான் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது என சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளுக்கு தொடந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அனைத்து ஏரிகளிலும் குறைந்த அளவில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 9.537 டி.எம்.சியாக உள்ளது. சென்னையை சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தினந்தோறும் மழை பெய்து வருவதால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஏரிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’முல்லைப் பெரியாறு விஷயத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுப்பதா...’ அண்ணாமலை காட்டம்!