தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. இதற்கிடையே அரசு உத்தரவிட்டால் உடனடியாக ஆன்லைன் வழியிலான பதிவை தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தயாராகிவருகிறது.
கரோனா பாதிப்புக் காரணமாக ஒட்டுமொத்த கல்வித் துறை செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்னும் தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்படாமல் இருக்கின்றது.
இந்த சூழலில் பொறியியல் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் தீவிரமாக நடந்துவருகின்றன.
தொழில்நுட்பக் கல்வி ஆணையர் விவேகானந்தன், காணொலி வாயிலாக பொறியியல் சேர்க்கை ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியுளார்.
அரசு உத்தரவிட்டால் உடனடியாக ஆன்லைன் பதிவை தொடங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகத் தொழில்நுட்பக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆரம்பித்தவுடன், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிடும். கடந்தாண்டு மே 2ஆம் தேதிமுதல் ஆன்லைன் பதிவு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஆர்வம் காட்டிவருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் 70 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா சவால்களை சாதனையாக மாற்றும் தனியார் பொறியியல் கல்லூரி