தெலங்கானா, ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டது.
இதனடிப்படையில், இன்று (அக்டோபர் 21) முதல் சென்னையிலும், நாளை (அக்டோபர் 22) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ.45க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.