சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆசிஷ் பன்சால். இவருக்கு சொந்தமாக ஆந்திரா, ஸ்ரீபெரும்புதூரில் வாகன பேட்டரிகளுக்கான அலுமினிய லெட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலைக்கான தலைமை அலுவலகம் சென்னை சேத்துப்பட்டில் பிரபல வணிக வளாகத்தின் 4-வது மாடியில் செயல்பட்டு வருகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 72 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது.
இது தொடர்பாக நிறுவன உரிமையாளர் சார்பில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யாததால் வணிக வளாகத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
காவலாளிகள் பாதுகாப்பில் 24 மணி நேரமும் இருந்து வரும் வணிக வளாகத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் என்பதால் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் (57) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது? என்பது குறித்தும், பாதுகாப்பு நிறைந்த வணிக வளாகத்தில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்தும் பாண்டுரங்கனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து ரூ.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மூதாட்டியை நூதன முறையில் திசை திருப்பி 10 சவரன் நகைகள் கொள்ளை