சென்னை: முத்தியால்பேட்டையில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் ஜமால். டிச.13ஆம் தேதி இவரது வீடு மற்றும் கடைகளில் என்ஐஏ அலுவலர்கள்போல் நாடகமாடிய ஒரு கும்பல், 2.30 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய பாஜக முன்னாள் நிர்வாகியான வேலு என்ற வேங்கை அமரன், புஷ்பராஜ், வீரா என்ற விஜயகுமார், கார்த்திக், தேவராஜ் மற்றும் ரவி ஆகியோர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்து அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சரணடைந்தவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், வழக்கில் தொடர்புடைய முகமது ஃபாசில் என்ற உடற்பயிற்சியாளரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது வீட்டில் இருந்து சுமார் 1.65 கோடி ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டு கைதானவர்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுத்து வந்த நபரான சித்திக் மற்றும் அவரது சகோதரர் அலி ஆகியோர் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். இதனைத்தொடர்ந்து கொள்ளையடிக்க ஆள் சேர்த்த திருநெல்வேலியை சேர்ந்த திரைப்பட இயக்குனர் கந்தவேல் ராஜா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய வேப்பம்பட்டை சேர்ந்த கோபி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோபி கூலி வேலை செய்து வருவதும், குடிப்பதற்காக கொள்ளையடிக்கும் கும்பலுடன் இணைந்து 2.50 கோடி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
கொள்ளையடித்தவுடன் கோபி மது வாங்குவதற்காக 500 ரூபாய் கேட்டதற்கு, 25,000 ரூபாயை கொள்ளை கும்பல் கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோபியிடமிருந்து 22,000 ரூபாயை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் கைது!