சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்த மோதலில் அக்கட்சி இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதிகார மோதல் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 21-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு வரும் ஜனவரி 4-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது, சட்டப்பேரவை கூட்டம், எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் பலர் புகைப்படம் எடுக்க முயன்றனர். அதில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளராக இருக்கக்கூடிய உச்சி மகாலிங்கம் என்பவரும் புகைப்படம் எடுக்க முயன்றபோது அவரது சட்டைப்பையில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
இது குறித்து நம்மிடையே பேசிய உச்சிமகாலிங்கம், "நான் தென்காசி மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தேன். அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தரும் போது கூட்ட நெரிசலில் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தேன். அப்போது என்னுடைய சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு லட்சம் திருடப்பட்டுள்ளது. என்னுடைய சொந்த செலவிற்காக எடுத்து வந்த பணம் ஒரு லட்சம் திருடப்பட்டுள்ளது. அதில், 2000 நோட்டுக்கள் 50 இருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.