ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்நாத்(42). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று இரவும் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பூவிருந்தவல்லி அரசு பேருந்து பணிமனை எதிரே சென்று கொண்டிருந்தபோது, நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக இருந்ததால் மெதுவாக சென்ற பிரேம்நாத் மீது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து வந்த பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக இருப்பதாகவும், இதனை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்வதில்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!