கரோனா தொற்று எனும் கொடிய நோயிலிருந்து மீள்வதற்குள், கறுப்பு பூஞ்சை எனும் நோயினால் இறப்புகள் தொடங்கியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. வேலூர் மாநகருக்குள்பட்ட சேண்பாக்கத்தைச் சேர்ந்த முருகானந்தம் (44), சில நாள்களுக்கு முன்னர் கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், நேற்று (மே.26) கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கறுப்பு பூஞ்சை தொற்றின் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து நோய் பரவுவதை தடுப்பதற்காக அவரது இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (மே.26) உயிரிழந்தார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஏற்கெனவே 40 பேர் கறுப்பு பூஞ்சை தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ஆவர். தவிர திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்றையடுத்து, கறுப்பு பூஞ்சை நோயும் தாக்கி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.