சென்னை: நில மோசடி விவகாரத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், வழக்கில் தொடர்புடைய பலராமன் என்பவரை கைது செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
சென்னை, ஈ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி, காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகார் மனுவில், தனக்கு சொந்தமான திருவள்ளுவர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இருந்த சுமார் 8.3 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாக கூறி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும், பொது அதிகார பெற்றுக் கொண்டதாகவும்,
அந்த இடத்தினையும், அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பையை சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd., என்ற நிறுவனத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனை செய்து, தனக்கு ரூ.4.10 கோடி மட்டும் விற்பனை தொகையாக கொடுத்ததாக கூறி உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகு தான் தனக்கு சொந்தமான இடத்தினை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்து விட்டு தனக்கு வெறும் ரூ 4.10 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்ததாக அந்த புகார் மனுவில் நடிகை கெளதமி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள்..!
எனவே, தன்னை ஏமாற்றிய பலராமன், ரகுநாதன் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஆணையர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர், தலைமையிலான போலீசார், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னையைச் சேர்ந்த பலராமனை (வயது 64) கைது செய்து, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஊழல் அதிகமாக உள்ளது" - அண்ணாமலை பாய்ச்சல்!