சென்னை: நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே மணி என்பவரின் சாலையோர காய்கறி கடையில் நேற்று முன்தினம் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் பள்ளிக்கரணையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரு கட்டிங் மெஷின், ஒரு கவுண்டிங் மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக கேகே நகர் சேர்ந்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கள்ள நோட்டு விவகாரத்தில் வழக்கறிஞர் சுப்ரமணியத்துக்கு, பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் கார்த்திகேயனை அறிமுகம் செய்து வைத்ததுடன், மோசடிக்கு உடந்தையாக இருந்த சூளைமேடு வினோத் என்பவரையும் இன்று (ஆக.19) போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் மணி (27). இவரும், இவரது சகோதரர் தினேஷும் சேர்ந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது கடையில் புஷ்பா நகரைச் சேர்ந்த வீராசாமி என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கோயம்பேடு மொத்த சந்தையில் தினேஷ் மற்றும் மணி ஆகியோர் சென்று காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது பலமுறை இவர்கள் கொடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்துள்ளது. இதனால் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கள்ள நோட்டுகளை கண்டுபிடித்து, அவற்றை தினேஷ் மற்றும் மணியிடம் திருப்பி கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது கள்ளநோட்டுகளை கொடுத்து சிலர் காய்கறிகள் வாங்கி செல்வதை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும்போது ஒரு முறைக்கு இருமுறை நல்ல நோட்டுகள் தானா என்பதை கவனித்து வாங்குங்கள் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
அடிக்கடி கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி காய்கறிகளை வாங்கிச் செல்பவர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால் தினேஷ், மணி ஆகிய இருவரும் மன வேதனை அடைந்திருந்தனர். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 17) இரவு வழக்கம்போல வியாபாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், இவர்களது கடைக்கு வந்த ஒரு முதியவர் 670 ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் வாங்கிவிட்டு, மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார்.
மேலும் 670 ரூபாய் போக மீதி தொகையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறையும் கேட்டுள்ளார். ரூபாய் நோட்டுகளைப் பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் வீராசாமி, உடனடியாக கடை உரிமையாளர் தினேஷிடம் முதியவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை காண்பித்துள்ளார். அப்போது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்ததையடுத்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தினேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த அண்ணாமலை (64) என்பதும், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. பின்னர், அவர் கொடுத்த தகவலின் பெயரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் சுப்பிரமணியன் (62) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், சுப்ரமணியனின் வீட்டிலிருந்து ஒரு கட்டிங் மெஷின், ஒரு கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில் கோடீஸ்வரன் என்ற பெயரில் பிரம்மாண்டமாக விளம்பரப் படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் அடித்து தர வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள பிரஸ்ஸில் 90 கட்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குறைந்து வரும் தங்கத்தின் விலை.. புன்னகைக்கும் நகைப்பிரியர்கள்..!