சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க இயக்குநராக அறியப்படுபவர், பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். எளிய மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவதில் ரஞ்சித் கில்லாடி.
அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வையும் அவர்களின் வலிகளையும் தனது படங்களின் வழியாக தொடர்ந்து பேசி வருபவர். இவரது வழியில் மாரி செல்வராஜ், ஞானவேல் போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை தங்களின் திரைப்படங்கள் வழியாக பேசி வருகின்றனர். இவர்களுக்கு முன்னோடியாக பா.ரஞ்சித் பார்க்கப்படுகிறார்.
தற்போது, இவர் விக்ரம் நடிக்கும் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படம் இதுவாகும். விக்ரம் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
தங்கலான் திரைப்படம் உலக மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று சமீபத்திய பேட்டியில் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். மேலும், இதன் படப்பிடிப்பு கேஜிஎப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தில் கிராபிக்ஸ் பணிகள் உள்ளதால் விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. மேலும், படம் தொடர்பான மீதமுள்ள பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கலான் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி வரும் 17-ஆம் தேதி தங்கலான் குறித்த வீடியோ ஒன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கேஜிஎப் தங்கச் சுரங்கத்தில் அடிமைகளாக வேலை பார்த்த தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விக்ரமின் கெட்டப் பயங்கரமாக இருப்பதால் படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடி வரும் விக்ரமுக்கு தங்கலான் திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்கள் எப்படி அரசியல் பேசியதோ தங்கலான் படமும் அதே அரசியலை தீர்க்கமாக பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனை வைத்து ரஞ்சித் இயக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: "விடுதலை படம் தமிழ் சினிமா பார்க்காத கதைக்களம்" - படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!