இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று மாலை பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளார்.
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்.
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
- வரும் ஞாயிறுயன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.
- கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம் மற்றும் இன்ன பிற துறைப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஞாயிறுயன்று மாலை 5 மணிக்கு மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- சாதாரண மருத்துவச் சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கவும், அறுவைச் சிகிச்சை செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அதை முடிந்த வரை தள்ளி வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
- மத்திய நிதியமைச்சர் தலைமையில் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க பொருளாதார மீட்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தோட்டப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக் கூடாது.
- பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்.
- ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் எதுவும் இயங்காது. அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் தெரிவித்துள்ளபடி, தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
- மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் அரசு எடுத்து வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து, அதனை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும்ம் முதலமைச்சர் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'அனைவரும் மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும்' - கமல்ஹாசன்