சென்னை: வேலை நிறுத்தத்தை அறிவித்த ஆம்னி பேருந்து கூட்டமைப்பினர் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின்னர், இன்று (அக்.24) மாலை 6 மணியளவில் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் எந்த இடையூறு இல்லாமல் பயணிக்கலாம் என ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் செயலாளர் ஜெய பாண்டியன் தெரிவித்துள்ளனர்.
தொடர் விடுமுறைக்குப் பின்னர் மக்கள் அவரவர் சொந்த ஊர்களில் இருந்து, வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல உள்ள நிலையில், இன்று (அக்.24) மாலை 6 மணி முதல் தமிழ்நாடு , ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 119 பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ள நிலையில், அவற்றை விடுவிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் ஊர் திரும்புவதற்கு, முன்பதிவு செய்திருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் இந்த அறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சென்னை கே.கே.நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் முத்து, துணை ஆணையர் இளங்கோவுடன் உடன் தென் மாநில ஆம்னி உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன்-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் மாநில ஆம்னி கூட்டமைப்பு சங்க தலைவார் அன்பழகன் மற்றும் செயலாளர் ஜெய பாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது, "இன்று(அக்.24) மாலை அறிவிக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளின் வேலை நிறுத்தம் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நாங்கள் வைத்த மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.
எந்த தவறும் செய்யாத வாகனங்களை இடையில் வழிமறித்து, பயணிகளுக்கு இடையூறு செய்ய கூடாது போன்று மொத்தம் மூன்று கோரிக்கைகள் அவர்கள் முன்வைத்தோம். கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் ஏற்று கொண்டதால் எங்களின் போராட்டத்தை வாபஸ் வாங்கி, நல்ல முறையில் எங்கள் பயணிகளுக்கு சேவை செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எப்போதும் போல் வாகனங்கள் ஓடும். மேலும் அதிகாரிகளிடம் தவறாக பிடிக்கப்படிருந்த வாகனங்களை சுட்டிகாட்டி முறையாக வரி செலுத்தப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரிக்கை அளித்தோம். பிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு முறையான அனுமதி இருந்தால் விடுவிக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட 120 பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் குறித்து பறிமுதல் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு உரிமம் கொடுக்கப்படவில்லை. ஆகையினால் தற்காலிகமாக வெளி மாநிலங்களில் உரிமம் வாங்கிருந்தோம். தற்போது தமிழ்நாட்டிலேயே சிலர் உரிமம் பெற்றுள்ளோம். மேலும் இன்னும் சிறிது காலத்தில் அனைவரும் தமிழ்நாட்டில் உரிமம் பெற்று கொள்வோம்.
வருடத்திற்கு ஒரு முறை அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி முடிவு எடுத்து வரும் தீபாவளி பண்டிக்கைக்கு கட்டணங்களை வெளியிடுவோம். குறிப்பிடப்பட்ட கட்டனங்களுக்கு மேலாக வசூலிக்கப்பட்டால் வசூல் செய்த பேருந்தின் மீது புகார் அளிக்கலாம்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Omni bus strike: இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது - தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு!