சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 21) ஆய்வு செய்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், "கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 151.17 கோடி ரூபாயில் தேசிய முதியோர் நல மருத்துவர் வளாகம் கட்டப்பட்டது. கரோனா அதிகரித்ததால் இது 800 படுக்கையுடன் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது, கரோனா குறைந்ததால் மீண்டும் அதை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்தோம். ஆனால் தற்போது ஆய்வு செய்தபோது கையில் தொட்டாலே காரை உதிரும் அளவிற்கு சிமெண்ட் பூசாமல் உள்ளது.
இதில், தற்போது முதியோர் மருத்துவமனையாக மாற்றினால் ஆபத்து ஏற்படுமோ என்ற சந்தேகம் உள்ளதால் பொதுப்பணித் துறையை அணுகி தரத்தை 15 நாட்களுக்குள் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்க கூறியிருக்கிறேன். மூன்று நாட்களில் இந்த கட்டடத்தின் மாதிரிகள் சேகரிக்கபட உள்ளது. 10 நாள்களுக்குள் மையத்தை திறக்கலாம் என நினைத்தோம் ஆனால் தற்போது கட்டடம் உறுதி செய்த பிறகுதான் திறக்கப்படும். ஆய்வின் போது ஏதாவது முறைகேடு நடந்து இருந்தால் முதலமைச்சர் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஆயிரம் மருத்துவ பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு செவ்வாய் முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற பிறகு வெள்ளிக்கிழமை பணி மாறுதல் செய்யப்பட உள்ளது. முதல் முறையாக ஒரே நேரத்தில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவது இதுவே முதல் முறை.
நாவலூரில் ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் BA4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தத் தொற்றும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இருவரும் குணமடைந்து வருகின்றனர்.
மேலும் வரும் ஜூன் 12ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களின் கல்வி குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும், மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் குணமடைந்தும் மருத்துவமனையிலே வாடும் அவலம்... நடவடிக்கைகோரி மனு!