சென்னை: காலவரையறையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகையினை வழங்குதல், தேர்தல் வாக்குறுதியான வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உதயமாகி உள்ளது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலித்து, இந்த உயர்வினை 1. 4.2023 முதல் செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியினை 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக, 4 சதவிகிதம் உயர்த்தி 1.4.2023 முதல் வழங்க ஆணையிட்டதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒன்றிய அரசினைப் பின்பற்றி, இதற்கு முன்னர் 1.7.2022 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவிகித அகவிலைப்படியானது, 1.1.2023 முதல் 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட்டபோது, வெளியிடப்பட்ட அரசாணையில் இதுநாள்வரை கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்றிய அரசின் அறிவிப்பாணை, குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கமானது, இவ்வாறான நடைமுறையானது, இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்தாலும், தமிழ்நாடு அரசு அதனை நடைமுறைப்படுத்துவது என்ற நடைமுறையானது இனி தொடராது என்ற கொள்கை முடிவினை எடுத்துள்ளதைப் போன்ற தோற்றத்தினை உருவாக்கிவிட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து அரசின் நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.1.2023 முதல் வழங்கப்பட வேண்டிய 42 சதவிகிதம் அகவிலைப்படியினை மூன்று மாதம் கழித்து 1.4.2023 முதல் வழங்க உத்தரவிட்டிருந்தாலும், “எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வினை செயல்படுத்திடும்" என்ற கொள்கை முடிவினை அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் நன்றிகளை உரித்தாக்குகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வகுத்த பாதையில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின்பால் நல்லுறவோடு இணக்கமான சூழலை உருவாக்கியதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க நிர்வாகிகள் இன்று (மே 17ஆம் தேதி), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, நன்றியினைத் தெரிவித்துக் கொண்டோம். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகையினை வழங்குதல், தேர்தல் வாக்குறுதியான-வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை விரைவில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உதயமாகி உள்ளது'' என அதில் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!