சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சோழன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணி (85). இவரது மனைவி இந்திரா (76). கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சென்னையில் வசித்து வரும் இவர்களது மகள், தந்தையை பார்ப்பதற்காக மாடம்பாக்கம் வந்துள்ளார்.
பின், தன் மகளை அழைத்துக் கொண்டு தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு சென்று வீட்டிற்கு வழி அனுப்பி விட்டு, மீண்டும் மாடம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மணி வந்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று, முதியவர் மணியை முட்டி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர், நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த முதியவரை, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முதியவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சி உள்பட வேளச்சேரி செல்லும் பிரதான சாலையான முடிச்சூர் சாலை, மாடம்பாக்கம் மற்றும் ஜி.எஸ்.டி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், அதுமட்டுமின்றி மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கண்டுகொள்ளாமல் சாலையில் விடுகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுவது மட்டுமின்றி, விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது எனவும், இனி மாடுகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு!