சென்னை: திருவல்லிக்கேணி அருகே மாடு முட்டியதில் படுகாயமடைந்து, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று (அக்.28) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், பொதுமக்களை தாக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவர் சுந்தரம் (74). இவா், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு திடீரென சுந்தரத்தை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள வாக்காளர்கள் எத்தனை பேர்? எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள்? - முழு விவரம்!
இதனையடுத்து அவரை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடிக்க உத்தரவிட்டனர். மேலும், அந்த மாடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மாடு என்பதால், அதை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோசாலைக்கு அணுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும், முதல் முறை என்றால் அபராதம் 5,000 எனவும், இரண்டாவது முறையில் 10,000 ரூபாய் எனவும் அபராதம் போடப்படுகிறது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி அருகே மாடு முட்டியதில் படுகாயமடைந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆனைமலை காப்பகத்தில் புலிக்குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி - வனத்துறையினர் ஆய்வுக் கூட்டத்தின் முடிவு என்ன?