ஆவடி மாநகராட்சியில் 514க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 21 பேர் உயிர் இழந்துள்ளனர். நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஆவடி மாநகராட்சியில் மட்டும், ஐந்து சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரண தொகையாக ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
குறிப்பாக நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க ரேஷன் அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆவடி மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் ரேஷன் அலுவலர்கள், ரேஷன் கடைகளை மூடிவிட்டு அந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி போன்ற அரசு அலுவலகங்களில் மக்களை கூட்டி வைத்து நிவாரணத் தொகையை வழங்கினர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் 1000 ரூபாய் பணத்தை பெற நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சம் இல்லாமல் பொதுமக்களும் அலைமோதினர். மேலும் அலுவலர்கள் பொதுமக்களை கூட்டி வைத்து பணம் வழங்கியது அரசின் அலட்சியத்தை வெளிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.