ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஞானகனி (45). கடந்த ஆண்டு ஞானகனி, தனது வீட்டுக்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு அயப்பாக்கத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.
இந்நிலையில், அங்கு பணியாற்றும் லைன் இன்ஸ்பெக்டர் (ஆய்வாளர்) பாலசுப்பிரமணியன் (42) என்பவர், ஞானகனியை சமீபத்தில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவர் உங்களுடைய விண்ணப்பம் என்னிடம் தான் உள்ளது.
நீங்கள் ரூ.7ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறி உள்ளார். இதனை அடுத்து, பணம் கொடுக்க விரும்பாத ஞானகனி ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அலுவலகத்தில் டிஎஸ்பி பாஸ்கரிடம் புகார் செய்தார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயன பவுடர் தூவிய ரூ.7ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்து மின்வாரிய அலுவலர் பாலசுப்பிரமணியிடம் வழங்குமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, இன்று (டிச.29) ஞானகனி, அயப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்று பாலசுப்பிரமணித்தைச் சந்தித்து லஞ்சப் பணத்தைக் கொடுத்து உள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மலர்கொடி தலைமையில் காவல்துறையினர் பாலசுப்பிரமணித்தை பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர், காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.