தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உடல்நலம் குறித்த பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாதம் இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் மூட்டுவலி குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு மருத்துவர் சிங்கார வடிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், அறிவியலின் அசுர வளர்ச்சியால் மனிதன் வசதிகளை பெருக்கிக் கொண்டு வந்தாலும், அதனை அனுபவிக்க நோயில்லாத வழியில்லாத உடல்நலம் வேண்டும். ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி நோய் மூட்டுகளை பாதிக்கும் எந்த ஒரு அசைவும் வலியை உண்டாக்கக் கூடியதாக அமையும்.
எந்த ஒரு மனிதனுடைய நடமாட்டமும் வலியினால் பாதிக்கப்பட்டு, அதனால் அவன் விரும்புகின்ற இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றால் அந்த வாழ்க்கை முழுமையானதாக நிறைவானதாக இருக்க முடியாது.
மேலும் இந்தியாவில் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி 60வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 9.6 சதவீதமும், பெண்களில் 18 சதவீதமும் உலகளவில் மூட்டு அழற்சி அறிகுறி கொண்டவர்களாக உள்ளனர்.
இந்த நோய் ஆண்களை விட பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. முதுமை, உடல் பருமன், உட்கார்ந்த வாழ்க்கை முறை போன்ற தொடர்புடைய காரணிகளின் அதிகரிப்பு காரணமாக இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூட்டு அழற்சி நோய் வாதத்தினால் அல்லது முடக்குவாதத்தினாலும் இந்த நோய் வரலாம்.
முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு பல வகையான மருந்துகள் உள்ளன. அவைகளைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
இந்த கோளாறு உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுக்கு இருந்தால் உங்களுக்கு மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மரபணுக்கள் கீல்வாதத்தை தூண்டக்கூடிய சுற்றுச்சூழல் காரணிகள் உங்களை அதிகம் பாதிக்ககூடும்.
மேலும் முட்டி எலும்பு உடைந்தால் அதனை சரியான நேரத்தில் சரியான சிகிச்சை செய்வதன் மூலம் மூட்டு அழற்சி நோயை தடுக்கலாம். அதிகப்படியான உடைகளை எடுத்துச் செல்வது மூட்டுகளில் குறிப்பாக உங்கள் முழங்கால் இடுப்பு மற்றும் முதுகெலும்புகளுக்கு அழுத்தத்தை அளிக்கிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு மூட்டுவலி வருவதற்கான ஆபத்து அதிகம்.
இந்த நோய் பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள் ,கால்கள் மற்றும் முதுகு எலும்புகளில் உள்ள மூட்டுக்களை பாதிக்கிறது. உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மரபணு முன்கணிப்பு எலும்பு அடர்த்தி, அதிர்ச்சி மற்றும் பாலினம் போன்ற மாற்றக்கூடிய மற்றும் மாற்ற முடியாத காரணங்களாலுடன் இந்த நோய் தொடர்புடையது.
இதை தடுக்க உடற்பயிற்சி அவசியம். கழுத்துப்பகுதி, முதுகெலும்பின் அடிப்பகுதி, முழங்கால் பகுதி, மூட்டு பகுதி ஆகிய பகுதிகளுக்கு முறையான உடற்பயிற்சி தினமும் செய்வது அவசியமாகும்.
மூட்டு அழற்சி நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை மேற்கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றம், தசைகளை வலுப்படுத்துதல், பிசியோதெரபி, வலிநிவாரணி மருந்துகள் அறுவை சிகிச்சைகள் ஆகியவை மூலம் சரிப்படுத்த முடியும். குறிப்பாக மூட்டு அழற்சி நோய் வந்தபிறகு வலி நிவாரண மருந்துகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது.
தினமும் தொடர்ந்து பிசியோதெரபி செய்யவேண்டும். தேவைப்பட்டால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்றார்.
இதையும் படிங்க: மேக்-அப் செய்யணும்...டெலிவரியை தள்ளி போட முடியுமா? பிரசவ வலியில் கிம் செய்த அலம்பல்