மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக, திராவிடர் கழகம், திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய்நாராயண் ஆஜராகி,“தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு முறை இருக்கும்போது மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவது தவறானது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பி.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் உள்ளனர். எனவே, ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பது சட்டப் படி தவறாகும்" என வாதிட்டார்.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைப் பொறுத்தவரை, இடஒதுக்கீடு 50 சதவீதம் என்ற அளவை தாண்டக் கூடாது என்ற நிபந்தனையுடனும், தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டிற்கு இடையூறு செய்யாத வகையில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இதர மனுதாரர்களான திமுக சார்பில் பி.வில்சன், அதிமுக சார்பில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பாமக சார்பில் கே.பாலு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டாலின் அபிமன்யு ஆகிய மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
அவர்கள், "இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு ஜனநாயக விரோதமாக, அரசியலமைப்பை மீறி திருடிக் கொண்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, “மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த 170 பக்க தீர்ப்பின் முக்கிய சாராம்சங்கள் இதோ :-
மாணவர் சேர்க்கையின் போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என மருத்துவ கவுன்சில் விதிகள் கூறுகிறது. அதே போல, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடவில்லை. அந்த விதிகளில் மாநில இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என தனித்தனியாகக் குறிப்பிடவில்லை.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்த போது, அதற்கு மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, தற்போது மாநில அரசு ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பதை ஏற்க முடியாது.
நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுவதால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தால் தகுதி சமரசம் செய்து கொள்ளப்படாது.
மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை.
திறமை (Merit) என்று காரணம் கூறி ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அந்த வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையிலோ அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலோ இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதால், மாணவர்களின் தகுதி எந்த விதத்திலும் பாதிக்காது.
மாநில அரசுகள் ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டு சலுகையை மறுக்க சொல்லும் எந்த காரணமும் சரியானதாக இல்லை.
உச்ச நீதிமன்றம் ஏதும் உத்தரவு பிறப்பிக்கும் வரை, மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு சலுகையை வழங்க சட்டரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் எந்த தடையும் இல்லை.
இடஒதுக்கீடு என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத வரை, அது அடிப்படை உரிமையாகவோ, சட்டப்பூர்வ உரிமையாகவோ கருத முடியாது.
அரசியல் சாசனத்தின் 15ஆவது மற்றும் 16ஆவது பிரிவுகள், இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக 1993 ஆம் ஆண்டே சட்டம் இயற்றியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2016ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள போதும், இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை.
மாநில அரசு தெளிவாக சட்டம் இயற்றியிருக்கும் பட்சத்தில் அதை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை புறந்தள்ளிவிட முடியாது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ கவுன்சில் அலுவலர்களும் முடிவெடுக்க வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, இறுதி செய்ய வேண்டும்.
மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உண்டு; அதற்கு உரிமை உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் கோரிக்கையில் நியாயம் உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்.