சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் நல்ல முறையில் தேறி வருவதாகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் மற்றும் 92 வயது பெண்மணி ஆகியோரை சிறப்பான சிகிச்சையின் மூலம் அரசு மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக கூறினார்.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முழுமையாக அறிந்துகொண்டு பேச வேண்டும் என்றும், ஸ்டாலின் பேசுவதைப் போன்ற கற்பனையான விஷயங்களை தமிழ்நாடு அரசு செய்ததில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தில் போராடி பெற்றது அதிமுக அரசுதான் என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், 50% இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் சென்று, ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வாதாடி வருவதும், அதிமுக அரசுதான் என்றும் கூறினார்.
நடப்பு ஆண்டில், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்து விட்டதால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும், அவ்வாறு வரும் தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு வெற்றியைத் தேடித் தரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கபசுரக் குடிநீர் கரோனாவுக்கான மருந்தா? நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி