சென்னை: திமுக ஆட்சி அமைந்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக நடத்தப்படுவதாகவும், அதனை எதிர் கொள்ள அதிமுக தயார் நிலையில் உள்ளதாகவும் அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்தது.
அதிமுகவினர் போராட்டம்
இதனிடையே சட்டப்பேரவையில், கொடநாடு விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி சயானிடம் காவல் துறையினர் நேற்று (ஆக.17) மறு விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது.
ரகசிய விசாரணை ஏன்?
நீதிமன்ற விசாரணையின் போது சயான் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும் போது, அதனை மீண்டும் விசாரிப்பதில் சதி இருக்கிறது" என குற்றஞ்சாட்டினார்.
ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் நாளை சந்திப்பு
இந்தநிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நாளை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: முதியோர் பசி தீர்க்க உடன்பிறப்பு உணவகம் தொடங்க வேண்டும் - சிந்தனைச் செல்வன்