சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக கடந்த திங்கள் கிழமையன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கபட்டதாக அறிவித்தது. மேலும், இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் தலைவர்களை அவமதித்து பேசிவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கபட்டது.
அன்றைய தினமே மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வ 'X' பக்க வளைதளத்தில் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' என்ற பதிவும் பகிரப்பட்டது. இக்கூட்டணி பிளவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும்' என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் அறிவிப்பு: இதனிடையே, மதுரையில் இன்று (செப்.27) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மாலை அதிமுக - பாஜக கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அதிமுக தலைமைக்கும் ஓபிஎஸ்க்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வரக்கூடிய நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்திருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் இனக்கமான சூழல் நிலவி வரக்கூடிய சூழலில், ஓபிஎஸ் இது குறித்த தனது நிலைபாட்டை அறிவிக்கப்போவதாக கூறியுள்ளதை அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்குகின்றன.
பாஜகவுடன் கைக்கோர்க்க உள்ள ஈபிஎஸ்? அதிமுகவுக்கு என்ன சிக்கலை தரும்: இந்நிலையில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இதுகுறித்து கூறியதாவது, 'நிச்சயம் ஓபிஎஸ் டெல்லி பாஜகவுடன் சமரசம் பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், தற்போது வரை ஓபிஎஸ் பாஜகவிற்கு எதிராக எந்தவித அறிவிப்போ அல்லது அறிக்கையோ வரவில்லை. அதேபோல, தற்போது எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் நாடகத்தில் கட்டாயம் ஓபிஎஸ் மாட்டிகொள்ள மாட்டார்.
மேலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தான் 'பிரதமர் வேட்பாளர்' என ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டார். அதற்கு மாறாக, கண்டிப்பாக அவர் செயல்படமாட்டார். இதன் மூலம் அடுத்துவரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு ஓபிஎஸ் அச்சாரமிடுகிறார்' என அவர் தெரிவித்தார்.
மேலும், 'பாஜக சார்பாக போட்டியிடக்கூடிய தொகுதிகளில் கட்டாயம் ஓபிஎஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தமாட்டார். மாறாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குகளை குறைப்பதற்காக அவர்களின் வேட்பாளர் நிற்கும் தொகுதிகளில் தனது பணிகளை மேற்கொள்வார்' எனவும் கூறினார். குறிப்பாக, 'டெல்டா மாவட்டங்களில் தனது பலம் என்ன? என்பதை நிருபிக்க இந்த வாயப்பை ஓபிஎஸ் பயன்படுத்தி கொள்வார்' எனவும் அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக உடன் விசிக கூட்டணியா? - வன்னி அரசு பதில்!