சென்னை: தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த எஸ். ரியாஸ்தீன் என்பவர் உலகிலேயே எடை குறைந்த சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். இந்தச் செயற்கைகோள்களை அடுத்தாண்டு நாசா விண்வெளியில் செலுத்தவுள்ளது. இந்நிலையில், பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ரியாஸ்தீனை பாராட்டி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோளை வடிவமைத்து உலக அரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைசேர்த்துள்ள தஞ்சையைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய விண்வெளித் துறையில் ஒரு மைல் கல்லாக, மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்துள்ள விஷன் சாட் வி-1, வி-2 ஆகிய செயற்கைக்கோள்களை 2021ஆம் ஆண்டில் நாசா விண்வெளியில் செலுத்தவிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. நாளைய இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களாகிய இளைய சமுதாயத்தின் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் வல்லரசு இந்தியா வெகுவிரைவில் என்னும் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கற்பித்தலில் புதுமை - பிரதமர் மோடி பாராட்டிய ஆசிரியர் திலீப் சிறப்பு பேட்டி!