தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 10 ஆயிரம் செவிலியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்தது. தகுதி முன்னுரிமை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐந்து வருடங்கள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த முறையிலே தங்களது பணியை செவிலியர்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக தங்களது பணியை ஒப்பந்த செவிலியர்கள் செய்துகொண்டு வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும், அதை பரிசீலிக்க அன்றைய சுகாதார செயலாளர் தலைமையில் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சம வேலை செய்யும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காமல் வெறும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே தொகுப்பு ஊதியமாக மாநில அரசு வழங்கிவருகிறது.
இந்நிலையில், நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் உள்ள எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் கருப்பு அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டை உலக சுகாதார நிறுவனம் செவிலியர்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டாவது தன்னலமற்று பணி செய்யும் தங்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய பாஜக எம்பி