தமிழ்நாடு முழுவதும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நேற்று (ஜன.29) போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுகாதார செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முழுமையான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள படாவிட்டாலும், ஒரு சில உடன்பாடுகள் எட்டப்பட்டது.
எனவே, சுமூக முடிவினாலும், போலியோ சொட்டு மருந்து நாள் வர இருப்பதாலும் பொது மக்கள் நலன் கருதி போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது.
சுகாதார செயலாளருடனான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவில், முதல் கட்டமாக புதிய மருத்துவக் கல்லூரி பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். அந்த பணியிடங்கள் வரும் பிப்ரவரி 15க்கு முன்பு கால முறை ஊதியத்தில் நிரப்பப்படும்.
சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 2015ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு, புதிய பணியிடங்கள் உருவாக்கி பணி நிரந்தரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த ஒவ்வொரு வருடம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை அடுத்த கட்டமாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலமாக நேரடியாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் இதர விடுப்புகள் ஊதியத்துடன் வழங்கப்படும். மேலும் பொது விடுமுறைகளும் (compensatory leave) வழங்கப்படும்.
எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கோப்புகள் வழக்கில் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிர்வாகியை மாற்றக்கோரி அதிமுக தலைமை அலுவலகம் முன் போராட்டம்!