சென்னை: கரோனா தொற்று அதிகரித்த காலகட்டத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கடந்த 2019ஆம் ஆண்டு, எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் மூவாயிரத்து 485 பேர், 6 மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த மே மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, கரோனா இரண்டு மற்றும் மூன்றாம் அலை காரணமாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதுவரை மருத்தும் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள இவர்களை, நிதி பற்றாக்குறை காரணமாக, மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு தங்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் 600-க்கும் மேற்பட்ட செவிலியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலி அமுதா என்பவர் கூறுகையில், “கரோனா தொற்றின் காரணமாக மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது.
தற்போது கரோனா இரண்டு மற்றும் மூன்றாம் அலை காரணமாக, ஆறு மாதங்களுக்கு ஒரு பணி நீடிப்பு வழங்கப்படுகிறது. கரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது கடுமையான சுமையுடன் பணிபுரிந்தோம்.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப் மருத்துவச் சேவை இயக்குநர் கட்டுப்பாட்டில் இருந்த தங்களை, மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் மாற்றம் செய்வதாக கூறியுள்ளனர். எனவே மருத்துவப் பணியாளர் தேர்வணையத்தின் மூலம் தேர்வுச் செய்யப்பட்ட தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து வேறுபட்டது திமுக
இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியரை நேரில் சந்தித்த பின் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் கரோனா காலத்தில் பணியில் சேர்ந்த செவிலியரை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் இருந்து திமுக ஆட்சி வேறுபட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசு, செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என கோரினார்.
இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?