நடிகர் விஜயகாந்த் நடித்த 'உளவுத்துறை', 'ஜனனம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய எஸ்.டி. ரமேஷ் செல்வன் 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவாதி கொலை வழக்கை மையப்படுத்தி 'நுங்கம்பாக்கம்' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.
இப்படத்தை அக்டோபர் 30ஆம் தேதி சினி பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான 24 மணி நேரத்திலேயே சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியானது.
இதனால் தனக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரமேஷ் செல்வன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் கூறுகையில், "நுங்கம்பாக்கம் திரைப்படம், பைனான்சியரிடம் கடன் பெற்று 3.5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளை இப்படம் சந்தித்து தற்போதுதான் வெளியாகியுள்ளது.
வெளியான 24 மணி நேரத்திலேயே சட்டவிரோதமாக 25 ஆன்லைன் வலைதளங்களில் படம் வெளியானது. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியான திரைப்படத்தை உடனடியாக நீக்கக்கோரி சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.