சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ (23) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் மீது அதிமுக பேனர் விழுந்ததில் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் சாடிய நிலையில், காவல் துறையின் விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுபஸ்ரீயின் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ட்விட்டரில், #whokilledshubashree என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி இருகின்றன. #WhoKilledSubashree என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அன்பழகன் சேகர் என்ற நபர் ட்விட்டரில் சுபஸ்ரீ எனது அலுவலக நண்பர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் சுபஸ்ரீயின் அலுவலகத்தின் இருக்கை, கணினியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சுபஸ்ரீயின் இருக்கைக்கு அருகே மலர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அவர் பகிர்ந்திருந்த அந்தப் புகைப்படத்தில் ‘நாங்கள் சுபஸ்ரீயை அதிகம் நேசித்தோம், ஆனால் கடவுள் அதைவிட அதிகமாக நேசித்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவிக்கு நெட்டிசன்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு பலரும் சமூக வலைதளங்களில் ஆக்ரோசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.