சென்னையில் வாகனப்பலகைகளில் உள்ள எண்கள் விதிப்படி இல்லாமல் பல நிறங்களில், பல எழுத்து அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விதிகளை மீறி வாகனங்களில் உள்ள எண் பலகைகளை, முறையாக மாற்றி அமைக்க வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சில நாள்களுக்கு முன் வாகன ஓட்டிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
முக்கியமாக சென்னை முழுவதும் ஏ.என்.பி.ஆர் எனப்படும் நவீன சிசிடிவி கேமராக்கள் அமைத்து போக்குவரத்து விதிமீறல்களை காவல் துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். வாகனப்பலகை எண்கள் விதிமுறைப்படி அமைக்கப்பட்டால் மட்டுமே, நவீன கேமராவானாது விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் எண்ணை படம் பிடித்து, வாகன உரிமையாளர் யார் என்பதை வாஹன் இணையதளம் மூலம் கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருள் செயல்படும்.
இந்த நவீன கேமரா படம் பிடிக்கும் வாகன எண் தொடர்புடைய வாகன ஓட்டிகளின் முகவரிக்கு, போஸ்டல் மூலம் சலான் அனுப்பப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதை மேலும் நவீனப்படுத்தி கேமராவே வாகன எண்ணை அடையாளம் கண்டவுடன் மின்னஞ்சல் மூலம் வாகன உரிமையாளருக்கு சலானை மெயில் அனுப்பும் வகையிலும் கேமராவில் மென்பொருளை மேம்படுத்த உள்ளதாக போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தினால் சிக்கும் வாகனங்களை சரிசெய்ய காப்பீடு கோரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு பணம் பெறுவதற்கு இந்த முறை உதவும். மேலும், அரசு விதிப்படி வாகனப்பலகை அமைக்காதவர்களை முதல்கட்டமாக எச்சரித்து மட்டும் அனுப்ப உள்ளதாகவும், அதன் பின்னும் தொடர்ந்து வாகனப்பலகையை முறையாக வைத்திருக்காவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளரிடமிருந்து அபராதம் வசூலிக்காமல், வாகனப்பலகை எண்களை விதிமுறைப்படி மாற்றிக்கொண்டு வந்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்று மாதத்திற்குள் சென்னையில் அனைத்து வாகனங்களிலும் வாகனங்களின் எண் பலகைகள் விதிப்படி மாற்றுவதற்காக போக்குவரத்து காவல் துறையினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிதாக பதிவு செய்த வாகனங்கள் அனைத்திலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆட்டோ எண்ணை இருசக்கர வாகனம் என குறிப்பிட்டு அபராதம் விதித்த காவல் துறை!