சென்னை: கோணங்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் இலக்கிய வட்டத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய நாவல்களான மதினிமார்கள் கதை, பாழி, பிதிரா, இருள்வ மௌத்திகம் இலக்கிய படைப்புகளில் புகழ் பெற்றவையாகும். இவரது சகோதரர் முருகபூபதி, மணல்மகுடி நாடக மன்றத்தை நிறுவியவர். கோணங்கி மணல்மகுடி நாடக மன்றத்தில் கதைச்சொல்லியாக உள்ளார். 2021ஆம் ஆண்டு கோணங்கிக்கு இலக்கிய மாமணி விருது வழங்கி, தமிழ்நாடு அரசு கெளரவித்தது.
ஆனால், அண்மையில் கார்த்திக் ராமச்சந்திரன் என்ற ஆராய்ச்சி மாணவர் எழுத்தாளர் கோணங்கி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் "நார்மலைஸ் ஆக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள்: கலையின் பெயரில் கலைஞனை கொல்லுதல்" என்ற தலைப்பில் ஒரு நீண்டப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ''மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் மாணவனான எனக்கு கல்லூரி சூழல் தமிழ் இலக்கியம், நாடகம் சார்ந்த அறிமுகத்தை வழங்கியிருந்த காலம். என் ஆர்வமிகுதியை பார்த்த பேராசிரியர் நல்லெண்ணம் கருதி, மணல்மகுடி நாடக குழுவிடம் அறிமுகப்படுத்தினார். மேலும் 2013 ஜனவரி மாதம், குழுவில் இணைவதற்கு முன்பே மணல்மகுடியின் நாடகப் பிரதி, முருகபூபதியின் நேர்காணல்களை கல்லூரி நூலகத்தில் வாசித்திருந்தேன்.
கோணங்கியின் பிதிரா, பாழி போன்ற நூல்ககளை பார்த்திருந்தேன். பதின்மவயது பையனான நான் குடும்பம், பள்ளி மற்றும் கல்லூரி நட்பு வட்டம் தாண்டி இவர்கள் தான் நான் சந்திக்கும் நபர்கள். குழுவில் சேர்ந்த சில வாரங்களில் சர்வதேச நாடக விழாவிற்காக புது டெல்லி பயணம் மற்றும் கோணங்கி அறிமுகம் என வாழ்வு கனவு போல் இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கோணங்கியின் பாலியல் வன்மங்கள் குறித்து பதிவிட்ட அவர், "கோணங்கி தனிப்பட்ட முறையில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று அழைத்து, தன்னிடம் பாலியல் சீண்டல்களை செய்து கொண்டிருந்தார். பெரிய எழுத்தாளர், நமக்கு தீங்கு விளைவிக்கமாட்டார் என 100 சதவீதம் நம்பினேன். கோணங்கியையும் பூபதியையும் GodFather போல நினைத்துக் கொண்டிருந்த பதின்மவயது பையனான எனக்கு பாலியல் சுரண்டல் பற்றி விழிப்புணர்வு இல்லை.
இதன்பின்னர் கோணங்கியின் போன் அழைப்பு வந்தால் பதற்றமும் பயமும் வரும். பாலியல் சுரண்டலை தவிர்க்கும் பொருட்டு கோணங்கியின் போன் அழைப்புகளைத் தவிர்ப்பேன். அப்போதெல்லாம், பூபதி அழைத்து “கோணங்கிக்கு உதவி தேவை; நீ உடனே அண்ணனை சென்று பார்க்க வேண்டும் என ஆணையிடுவார்”. பூபதியின் வார்த்தைகளுக்கு மறுப்புத்தெரிவிக்க இயலாமல் நண்பர்களை அழைத்துச்சென்று சூழலை சமாளிக்க திட்டமிடுவேன். அதற்கும் கோணங்கி கண்டிப்பார்.
“இவ்வாறு தான் மௌனியும் நகுலனும் தனக்கு இலக்கியம் படைக்கும் ஆற்றலை வழங்கினார்கள்; உனக்கும் அது கிடைக்கும்” என்பார். அதாவது ஆண்குறி வழியாக இலக்கிய படைப்பாற்றல் தலைமுறை தலைமுறையாக கைமாறுகின்றது என்கிறார்.
நாட்கள் செல்ல செல்ல மனநிலை நரகமானது. என் உளச்சிக்கல்களின் விளைவாக தற்கொலை எண்ணங்கள் வந்தது. அதன் பின்னர் என் குடும்பத்தினர் அரவணைப்புடன், தீவிர மனநல ஆலோசனையின் ஒரு வருட காலத்திற்கு மேலாக இருந்தேன். அப்போது கோணங்கி மற்றும் பூபதியிடம் இருந்து விலகி இருந்தேன்.
நிகழ்த்துக்கலை ஆய்வுகளுக்காக நீண்ட காலத்திற்குப்பிறகு, 2021இல் மணல்மகுடி குழுவினருடன் நெருக்கமானேன். இந்த சில மாதங்களாக பாலியல் வன்முறை பற்றிய புரளிகளாகவும் நகைச்சுவையாகவும் பேச்சு வந்தது," எனப் பதிவிட்டுள்ள கார்த்திக், ''மணல்மகுடியில் ஜெயபிரகாஷ் என்ற இளம் நாடக நடிகன், தனக்கு பாலியல் சுரண்டலால் சமுதாய பய உணர்வு (social anxiety) இருப்பதை சொன்னபோது, எனக்கிருந்த உளப் பிரச்சனைகளுக்கு கோணங்கி மற்றும் மணல்மகுடி சூழல் உருவாக்கிய பாலியல் வன்முறைதான் காரணம் என உணர்ந்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
''இங்கு கோணங்கியின் பாலியல் வன்முறைகள் இயல்பானவையாக பாவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வன்முறைக்கு உள்ளான எவருக்கும் பூபதியோ கோணங்கியோ நேரடியாக பதில் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட டஜன் கணக்கில் இளம் நாடக கலைஞர்களும் வாசகர்களும் கோணங்கியால் தொடர் சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களாகவே தன் அனுபவத்தை வெளியே சொல்வார்கள். நான் யாரையும் குறிப்பிட இயலாது'' என கார்த்திக் தெரிவித்துள்ளார்.
"வெளியே சொன்னால் நாடக கலை அழிந்துவிடும் என்று காரணத்திற்காக பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளுங்கள் என குழுவினர் எச்சரிக்கிறார்கள். The Artists are so vulnerable then the art. இங்கு கலைஞனாக பாதிக்கப்பட்ட நடிகர்களையே குறிப்பிடுகிறேன். கலை என்ற பெயரில் வன்முறையை வெளியே சொல்லாமல் இருக்க இயலாது," என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எழுத்தாளர் கோணங்கியின் பாலியல் சீண்டல்களை சமூக வலைதளத்தில் வெளிச்சமிட்டு காட்டியவர் கார்த்திக் ராமச்சந்திரன் மட்டுமல்ல. மற்றொரு நபர் ஷியாம் சுந்தர் வேல். இவர் பதிவிட்டுள்ள வலைத்தளத்தில், ''2018, மே மாதத்தில் நண்பன் அரவிந்தனின் வீடு என்ற முறையிலேயே கோவில்பட்டிக்குச் சென்றேன். தமிழில் முக்கிய எழுத்தாளர் என்று தெரிந்தவர்கள் சொல்லியும், நண்பனின் பெரியப்பாவாகவும் கோணங்கி அறிமுகமாகி இருந்தார். “உனக்கும் நான் பெரியப்பா தான் டா” என்று அவர் சொன்னதால், அவருக்கு அந்த மதிப்பை அளித்தேன்.
தனது எழுத்து வேலைகளுக்குத் தட்டச்சு செய்யவேண்டும் என்று உதவிகேட்டார். அந்தச் சந்திப்பிலிருந்து 2019 பிப்ரவரி மாதம் வரையில், வெவ்வேறு சூழ்நிலைகளில் கோணங்கியின் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினேன்'' எனப் பதிவில் கூறியுள்ளார்.
''மேலும் பலமுறை அந்த வீட்டில் இரவு தங்குவதற்குப் பயந்து, பல காரணங்களைச் சொல்லித் தப்பி ஓடியிருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு, இனம்புரியாத பதற்றத்துடனே அந்தக் காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது.
நான் பாலியல் சுரண்டலுக்கு உள்ளானதை உணர்ந்து கொள்வதற்கே ஆறு மாதங்கள் ஆனது. அதுவரையில் நடந்தவற்றைத் திரும்ப யோசிக்கையில், எனது இயலாமையை நினைத்து நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது. இதுகுறித்து நான் யாரிடமும் புகாரளிக்கவில்லை. புகாரளிப்பது குறித்து யோசிப்பதற்கே எனக்கு போதுமான தெளிவில்லை என்று அங்கிருந்தவர்களால் நம்பவைக்கப்பட்டிருந்தேன்'' என ஷியாம் சுந்தர்வேல் குறிப்பிட்டுள்ளார்.
"கோணங்கி செய்த பாலியல் அத்துமீறல்களைக் கண்டிக்காமல், ‘கலை’, ‘சரணடைதல்’, ‘Madness’ என்றெல்லாம் பாதிக்கப்பட்டவனைக் குழப்பி, உண்மையை வெளியில் சொல்லவிடாமல் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கியது, கும்பல் மனநிலையை உருவாக்கி, உளவியல் அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவனையே பொதுவெளியில் கோணங்கியைப் புனிதராக வழிபட நிர்ப்பந்தித்தது எனக் கோணங்கியின் பாலியல் சுரண்டல்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இதில் பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள்," என அவர் பதிவிட்டுள்ளார்.
‘போதுமான அதிர்ச்சி இல்லாத பொதுச்சமூகத்தை கோபம் கொண்டு விமர்சிக்கும் ச.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலரும், இந்த விசயத்தில் வெளிப்படையாகத் தங்களது கண்டனங்களை விரைவில் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது பிரபல தமிழ் எழுத்தாளர் கோணங்கி பாலியல் வன்முறை செய்ததாக பல இளைஞர்கள் சமூக ஊடகங்களில் புகார் அளித்ததை அடுத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கோணங்கியைக் கண்டித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடக செய்தியாளரிடம் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து தமுஎகச, எழுத்தாளர் கோணங்கி மற்றும் முருகபூபதிக்கு ஆகியோருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் கோணங்கி தான் தவறு செய்யவில்லை என தனியார் ஊடகத்திடம் சொல்லியிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, ''பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கின்ற நடவடிக்கையைப் பொறுத்து தான் சொல்ல முடியும்'' என்ற ஆதவன் தீட்சண்யா, ''பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் அனைத்து வகையிலான சட்ட நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம்'' என்றார்.
இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு #MeTooIndia என்ற பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் இயக்கம், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு நிலவிய எதிரான பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தியது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் இந்த இயக்கத்தின்கீழ் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக பொதுவெளியில் கூறினர். திரைத்துறை, ஐடி என அனைத்து துறையைச் சேர்ந்த பெண்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பல திரைப்பிரபலங்களும் இந்த பாலியல் புகார்களில் சிக்கினர். அதேபோல், ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து #MenToo என்ற இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகார் குறித்து எழுத்தாளர் கோணங்கியை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவருடைய தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் கோணங்கி அவர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து கருத்து தெரிவிக்க நினைத்தால், அந்தப் பதிவையும் வெளியிட ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் கோவாவில் 13 மாடல் அழகிகளுடன் உல்லாசம் - முக்கிய குற்றவாளி சிக்கிய கதை!