எம் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் லக்ஷ்மி கோவிந்தா வழங்கும் படம் 'காலேஜ் குமார்', ஹரி சந்தோஷ் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் பிரபு, நடிகை மதுபாலா, நடிகர் ராகுல் விஜய், பிரியா மற்றும் நகைச்சுவை நடிகர் பாலா சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப்படத்தின் பூஜை மற்றும் அறிமுக விழா இன்று சென்னையில் உள்ள பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபு, நடிகை மதுபாலா, நகைச்சுவை நடிகர் சாங்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல நட்சத்திரங்கள் ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளனர்.
அதில் நடிகர் பிரபு பேசுகையில், 'ஈடிவி நேயர்களுக்கு எங்கள் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'காலேஜ் குமார்' படத்தின் டீம் இப்போது இங்குள்ளோம். இந்த படத்தில் நடிக்கக் கூடிய அத்தனை பேரும் என் அருமை மதுபாலா, என் குட்டி பிரியா, அன்பு தம்பி ராகுல். இந்த படத்தின் இயக்குனர் ஹரி, இப்ப நாங்கள் அனைவரும் ஒன்றாக காலேஜ் குமார் படத்திற்காகக் கூடியுள்ளோம். இந்தப் படம் ஜாலியான ஒரு நல்ல குடும்ப சப்ஜெக்ட். இளைஞர்களும், பேமிலியும் விரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு படமாக இருக்கும். இப்படி ஒரு அருமையான டீமில் பணிபுரிவது எனக்கு மிகவும் சந்தோஷம்.
பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு பிறகு மீண்டும் மதுபாலா உடன் ஜோடி சேர்ந்து இருக்கிறீர்கள் அதைப் பற்றிக் கூறுங்கள்?
மீண்டும் மீண்டும் என்றால் நாங்கள் வயதானவர்களா என்ன? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, மதுபாலா கூட நடிக்கிறது. மதுபாலா அற்புதமான ஒரு நடிகை. பாஞ்சாலங்குறிச்சி படத்தில் உதட்டோர சிவப்பே என்ற பாடலில் நாங்கள் பணிபுரியும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
இயக்குனர் சீமானின் முதல் படம். அதேபோன்று இப்போது நகைச்சுவை நடிகராகவுள்ள இளவரசு அந்த படத்தின் கேமராமேனாக பணியாற்றியவர். பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு பிறகு 21 வருடம் கழித்து மீண்டும் மதுபாலாவுடன் 'கல்லூரி குமார்' படத்தில் இணைந்து நடிக்கிறேன் ரொம்ப சந்தோஷம்.
நீங்கள் திரைப்படத் துறைக்கு வந்து 37 ஆண்டுகள் ஆகிறது அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
37 ஆண்டுகள் நான் இண்டஸ்ட்ரியில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் மக்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதரவு தான். நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். முக்கியமாக மக்களுடைய அன்புதான் இதற்கு காரணம்.