கரோனா பரவல் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழ்நாடு மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு 650 டன் ஆக்ஸிஜன் ஒதுக்கியுள்ளதாகவும், அதை வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியைப் பொறுத்தவரை, 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 83.08 லட்சம் டோஸ்களும், 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்காக 13.10 லட்சம் டோஸ்களும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 30ஆம் தேதி நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்ட 75.73 லட்சம் பேருக்கும், 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 11.97 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இருப்பு இன்னும் இரு நாள்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால் போதுமான தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுதவிர 3.5 கோடி டோஸ்கள் கொள்முதலுக்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் முகத்தை உறவினர்களுக்குக் காட்டுவதைப் பொறுத்தவரை, ஏற்கெனவே வழிகாட்டி விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி தனிமைப்படுத்தல் அறையிலிருந்து எடுக்கும் போதும், அடக்கம் அல்லது தகனம் செய்யும் முன்பும் முகங்களை காட்ட அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன், அவர்களின் படிப்பை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், உறவினர்களால் கவனிக்கப்படும் குழந்தைகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கரோனா தொடர்பான புள்ளிவிவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், கரோனா நிவாரண உதவிகள் வழங்கச் செல்லும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏராளமான தொண்டர்கள், தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் செல்வதாகவும் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், கரோனா இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தாண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற இலக்கை விரைந்து எட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்களைத் தெரிவிப்பது அவமானமல்ல எனவும், அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
மேலும், பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜுன் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.