கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று வீடியோ கால் மூலமாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, கரோனா நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க 'கபசுரக் கசாயம்' குடிக்க வேண்டும் என சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.
மேலும், கபசுரக் கசாயத்தின் பலன் குறித்து தற்போது பெரும்பாலானோருக்கு தெரிய வந்துள்ளதால், இந்த கசாயம் விற்பனை செய்யப்படும் நாட்டு மருந்து கடைகளை 24 மணி நேரமும் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும், இந்தக் கசாயத்தை தயாரிக்க தேவைப்படும் 15 மூலிகைகளைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் காவல் துறையினர் தடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், கரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர் கொண்ட நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட மருந்தை வழங்க வேண்டும் என தங்களால் உத்தரவிட முடியாது என்றும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க...கரோனா தொகுப்பு: தள்ளாடும் எஸ்.பி.ஐ.!