சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமானம், ரயில், பேருந்து என அனைத்து பொது போக்குவரத்துகளும் ரத்துசெய்யப்பட்டன. பின்னர் வைரசின் (தீநுண்மி) தாக்கம் குறைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.
இருப்பினும் ரயில் சேவை முழுமையாக இயக்கப்படாததால், அனைத்து ரயில்கள், புறநகர் ரயில்களை இயக்க தென்னக ரயில்வேக்கு உத்தரவிடக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், "தற்போது 65 விழுக்காடு ரயில்கள் செயல்பட்டுவந்த நிலையில், அனைத்து ரயில்களும் எப்போது இயக்கப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை. படிப்படியாக மட்டுமே ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து 100 விழுக்காடு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ள நிலையிலும், திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியுடைய பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளும் 100 விழுக்காடு இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால், ரயில்கள் மட்டும் முழுமையாக இயக்கப்படவில்லை.
பேருந்துகளை ஒப்பிடும்போது ரயில்களின் கட்டணங்கள் 300 விழுக்காடு குறைவு. வியாபாரிகள் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அதிக கட்டணம் செலுத்தி பிற போக்குவரத்து வசதிகளை அணுக வேண்டியுள்ளது. தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ரயில்களை முழுமையாக இயக்கக்கோரி தான் அனுப்பிய கோரிக்கை மனுவை ரயில்வே துறை பரிசீலிக்கவில்லை" எனப் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கடந்த வாரத்திலிருந்து கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. விதிகளைப் பின்பற்றினாலும், புறநகர் ரயில்களில் அவற்றைப் பின்பற்ற ஆவன செய்ய முடியாது. கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் முடியாது. எனவே, ரயில்களை முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
மேலும், வல்லுநர்களை கலந்தாலோசித்து ரயில்வே நிர்வாகம் இது சம்பந்தமாக முடிவெடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடும் பணிகள் முழுமையடைந்த பிறகோ அல்லது தொற்றுப் பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பலாம். தற்போதைய நிலையைக் கருத்தில்கொண்டு நீதிமன்றங்களைத் திறக்கும் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.