தமிழ்நாடு போக்குவரத்து, சுகாதாரத்துறை அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க அரசுப் பேருந்துகளுக்கு மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேருந்துகள் சுத்தப்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனியார், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களிடம் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்கள் எடுத்துக்கூறப்பட்டன.
அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகள் உள்பட 2லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் துறையாக போக்குவரத்து துறை உள்ளது. பேருந்துகளில் கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்று காரணமாக புதிய ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்து இயக்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வெளியூர் பயணங்களை நிச்சயம் தவிர்க்கவேண்டும். அப்போதுதான் நோய் தடுப்பிற்கான ஸ்கிரீனிங் பணிகள் சிறப்பாக செய்ய முடியும். யாரும் எங்கும் போகக்கூடாது என்பதற்காக தான் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எல்லோருக்கும் முகக் கவசம் தேவைப்படாது. முகக் கவசம் அவசியம் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. அனைத்து துறைகளுடனும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலந்து பேசி கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாருக்கும் பாதிப்பில்லாததபடி வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்!