சென்னை அண்ணாநகர் 6 ஆவது அவென்யூவில் உள்ள பாரில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்றிரவு ( ஏப்.25 ) மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய போதும் இரண்டு பெண்களும் வீட்டிற்குச் செல்லாமல் 12 மணி வரை குடித்துக் கொண்டே இருந்துள்ளனர்.
இதனால் கடையை மூட வேண்டும் வெளியே செல்லுமாறு பார் ஊழியர்கள் பல முறை கூறிய ோதும், இரு பெண்களும் செவிசாய்க்காமல் இருந்ததால் இரண்டு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இரண்டு பெண்களையும் பார் ஊழியர்கள் வெளியேற்றி உள்ளனர்.
இதனையடுத்து அந்த இரு பெண்களும் ஆட்டோவில் ஏறி அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு போதையிலேயே சென்று, இந்தியாவில் வாழும் எங்களுக்கு 12 மணிக்கு மேல் குடிக்க அனுமதி இல்லையே எனவும் பெங்களூர், டெல்லி போன்ற நகரங்களில் தாங்கள் வாழ்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் தங்களை வெளியேற்றிய பார் ஊழியர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும் என காவலரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் புகார் எழுதுவதற்காக கொடுத்த பேப்பரை கிழித்து காவல் துறையினர் மீது இரு பெண்களும் வீசியதாக தெரிகிறது. தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்த இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர் கிருபா நிதி அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் இரு பெண்களும் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னைக்கு வந்து சூளை மேட்டில் தங்கி அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து அதிக அளவிலான போதையில் இருந்ததால் அவரது நண்பரான நான்சி என்ற பெண்ணை வரவழைத்து இந்த இரு பெண்களையும் அவரிடம் ஒப்படைத்து, காலை வருமாறு எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து இன்று காலை காவல் நிலையம் சென்ற போதை பெண்களிடம் விசாரணை செய்த காவல் துறையினர் அவர்களை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் இருந்த இரண்டு பெண்களின் செல்போனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை இளைஞர் மீட்பு!