சென்னை: பெங்களூரில் இருந்து அசாம் மாநிலத்திற்கு செல்கிறது தனுஷ்கியா விரைவு ரயில். பெரம்பூர் வழியாக கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் சென்று, அங்கிருந்து அசாம் செல்கிறது.
தனுஷ்கியா விரைவு ரயில் பெரம்பூர் வந்தபோது பள்ளி, கல்லூரி மாணவர்கள் வட மாநிலத்திற்கு செல்வதற்காக தாங்கள் முன்பதிவு செய்த பெட்டியில் நேற்று (டிச. 27) ஏறினர். அப்போது வட மாநிலத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பெட்டியில் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து பெற்றோர்களிடம் மாணவர்கள் செல்போனில் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசாருக்கு பெற்றோர்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார், திருவொற்றியூரில் தனுஷ்கியா விரைவு ரயிலை நிறுத்தினர்.
திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு பெற்றோர்களும் வந்தனர். இதையடுத்து வடமாநிலத்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர். சில வடமாநிலத்தவர்கள் கழிப்பறையில் சென்று பூட்டிக்கொண்டனர். இதனால், அவர்களையும் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ரயில் அசாம் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிளை தலைவர் வீட்டில் தேநீர் அருந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா