வடகிழக்குப் பருவமழை நேற்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே சென்னை நகரில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உயரும் என்பதால், தற்போது பெய்து வரும் மழை நீரை சேகரிப்பது குறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1636 கி.மீ., நீளமுள்ள 7 ஆயிரத்து 365 மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகள், 3 ஆயிரத்து 598 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறு பராமரிப்புப் பணிகள், 10 ஆயிரத்து 346 மனித நுழைவு வாயில் பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு, இப்பணிகளுக்காக 35 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆணையர் பிரகாஷ் இப்பணிகள் அனைத்தையும் ஓரிரு தினங்களில் முடிக்க அலுவலர்களிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகருக்குள் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஒப்பந்ததாரர்கள், ஒவ்வொரு வார்டுக்கும் தலா நான்கு முதல் ஐந்து தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும்; தவறும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணையர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தவிர, மழை நீர் சாலைகளில் தேங்குவதைத் தடுக்க அந்தந்தப் பகுதியில் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதைப் பயன்படுத்தி, உடனடியாக நீரை அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளது. வட கிழக்குப் பருவமழை குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை வாழ் மக்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்களே மேற்கொண்டு, பருவமழையை எதிர்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க:
தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!