சென்னை: வட கிழக்கு பருவமழையை யொட்டி பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைத் தொடங்க உள்ளதை தொடர்ந்து அனைத்துவகைப் பள்ளிகளிலும் மழைகாலங்களில் ஏற்படும் நோய்கள், விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆய்வு அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்கிட வேண்டும்.
சைக்கிளில் பள்ளிக்கு மாணவர்கள் பாதுகாப்பாக வருவதற்கும், செல்வதற்கும் அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்களின் உடைமைகள் நனையாமல் இருப்பதற்காக மழைக்கோட் அல்லது குடையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
மழையின் காரணமாக பள்ளியின் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை பூட்டி வைக்க வேண்டும். அனைத்து மின் இணைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும். இது போன்ற நேரங்களில் மின்வாரியப் பாெறியாளரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
மின் மோட்டார்கள் அமைத்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதிச் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி வளாத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள் திறந்தவெளி தொட்டி மற்றும் தரைட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருந்தால், அற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய வேண்டும்.
மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் தண்ணீர் பெருக்கம் அதிகரித்து உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை, குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பழுதடைத்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ, மின்கம்பி வடப் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக்கூடாது. மாணவர்கள் சாலையில் செல்லும் போது மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை குழிகளை பார்த்துச் செல்ல வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
ஆபத்தான நிலையில் உள்ள உயர் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறிந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் உடனடியாக மின்வாரிவத்தின் துணையுடன் அகற்றப்பட வேண்டும். வகுப்பறையில் சுவிட்சுகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதனை சரி செய்ய வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள் கைப்பிடிச் சுவர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பான தடுப்பு அமைக்க வேண்டும். டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களில் இருந்து மாணவர்களை பாதுகாத்துக் கொள்ளவும், நோய் வந்தால் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லவும் அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் வசிக்கும் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் காெள்ள அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரை தொடர்புக் கொண்டு இடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் அந்த கட்டிடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளிகளில் கனமழையால் தேங்கும் மழைநீரை இறைக்கும் வகையில் மின்மோட்டார் தயார் நிலையில் உள்ளாட்சி அலுவலகங்களில் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். கடலோரப்பகுதிகளில் புயல், மழையால் அந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் போது பள்ளிகளில் தங்க வைப்பதற்கு உரிய இடவசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் டி.குகேஷ் சந்திப்பு!