வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள அலுவலர்களை மண்டல கண்காணிப்பு அலுவலராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
இந்த மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை ஆணையர்கள் மதுசூதனன் ரெட்டி, சங்கர்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னை மாநகராட்சி வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
மழைநீரை அகற்றும் மோட்டார்கள் நீர்நிலைகளைத் தூர்வாரும் நவீன இயந்திரங்கள் பொது சமையலறைகள் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் சேவை துறைகளான காவல் துறை பொதுப்பணித் துறை மின்துறை மெட்ரோ ரயில் நெடுஞ்சாலைத்துறை மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு ஆகியவற்றை ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.
கூவம் அடையாறு மற்றும் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 30 நீர்வரத்து கால்வாய்களை கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மறு குடியமர்த்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தற்போது வரை கரையோரங்களில் வசித்துவந்த 17 ஆயிரத்து 768 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 90 விழுக்காடு அளவிற்கு பணிகள் முடிவுற்றுள்ளன. மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் அதிக குதிரை திறன் கொண்ட 60 என்னை பம்பு செட்டுகளை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் முழுவதும் பொதுப்பணித் துறையால் அகற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.