சென்னை: சேப்பாக்கம் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று(நவ.3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளனர். திருவாரூர், கடலூரில் அதிகமாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்கிறது. ஆனால் பெரிதாக பாதிப்பு இல்லை. உயிரிழப்பு இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதிவரை எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு கடந்த ஆண்டு எந்த பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டதோ அந்த இடத்தை தீவிரமாக கண்காணிக்க சொல்லி இருக்கிறோம்.
கால்நடைகளும் முக்கியம்
பருவமழையால் மனிதனுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். வானிலை அறிக்கையை தெரிந்துகொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம். கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். மீனவர்கள் பாதுகாப்பிற்காக கடலோர காவல்படை தயாராக உள்ளனர்.
மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆயிரம் பேரும், தன்னார்வலர்கள் ஒரு லட்சம் பேரும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன, நீர்நிலைகள் மற்றும் நீர்தேக்கங்கள் கண்காணிப்புக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பயிர்சேதம் - உடனடியாக இழப்பீடு
தமிழ்நாடு முழுவதும் 121 பாதுகாப்பு மையங்கள், 5 ஆயிரத்து 106 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது. சென்னையில் 350 மையங்கள் தயாராக உள்ளது. கடந்த ஐந்து மாத காலத்தில் மழைநீர் வடிகால்கள் தூர்வார முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் இருக்கும் மரக்கிளைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில் , விரைவாக மின்சாரம் அளிக்கவும் மின்சார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர்சேதம் ஏற்படும் போது உரிய இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈடு தாமதமாக வழங்கினால் பயனில்லை. எனவே உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் திருவாரூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 915 மரம் அறுக்கும் இயந்திரம், 2 ஆயிரத்து 795 ஜேசிபி இயந்திரம், 2 ஆயிரத்து 115 ஜெனரேட்டர், 483 நீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது.
மீனவர்களுக்கு உதவி
மேலும், வானிலை முன்னறிவிப்புகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க 21000 உயர் VFH கருவிகளும், 600 செயற்கைகோள் தொலைபேசிகளும் , 296 NAVTEX and NAVIC உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் 2021: மே.வங்கத்தில் மம்தா; இமாச்சல், ராஜஸ்தானில் காங்கிரஸ்; அசாமில் பாஜக