சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் காதில் 'புளுடூத்' வைத்துக்கொண்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 30 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பாரிமுனையில், சுங்கத்துறை அலுவலகத்தில் கேண்டீன் உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பிரிவுகளில் 17 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் மீது தேர்வு நடத்தும் கண்காணிப்பு குழுக்கு சந்தேகம் எழுந்ததால், அவர்களை விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வடமாநிலத்தவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்க அவர்களின் மேல் சந்தேகம் அதிகமானது. இதனால், அவர்களை சோதனை செய்ததில் காதுகளில் புளூடூத் மூலமாக தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அரியானா மாநிலம் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 30 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்வு மையத்தில் கைப்பேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவியைக் கொண்டு உடலில் டேப் சுற்றிக்கொண்டு, இத்தேர்வினை எழுதியுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் விண்ணபங்களை சோதித்ததில் ஒரே மாதிரி கையெழுத்தும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இவர்களுக்கு தேர்வு அறையில் இருந்து வெளியே உதவியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சுங்கத்துறையில் கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட 17 காலிப்பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு கல்வி தகுதியில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் தகுதி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னையிலேயே இப்பணி என்பதால், இத்தேர்வுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதில், 1,600 பேர் மட்டும் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இந்தத் தேர்வு சென்னையில் நடந்தது. அப்போது, காதில் 'புளுடூத்' ஹெட்செட் அணிந்துகொண்டு நூதன முறையில் வயிற்றில் சிம் கார்டு கொண்ட ஒரு கருவியை டேப்பினால் ஓட்டிக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கருவில் உள்ள சிசுவை பாலியல் கணிப்பு! வீடு எடுத்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் கைது! இருவர் தலைமறைவு! போலீசார் விசாரணை!