சென்னை: சென்ட்ரலில் இருந்து ஆட்டோவில் தாம்பரம் வரை வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கட்டுமானப் பொருட்கள் சிலவற்றுடன் வந்துள்ளனர். மேற்கு தாம்பரம் வந்ததும் கிழக்கு தாம்பரத்தில் அவர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த புதிய வணிக மையம் வரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் அதிக தூரம் பயணித்ததால், கூடுதலாக 50 ரூபாய் கேட்டபோது, ஆட்டோவில் இருந்த பொருட்களை இறக்கி வைத்த பின்னர் பணம் தர மறுத்து தகாத வார்த்தைகளில் திட்டி, அங்கு இருந்த இரும்பு கம்பிகளால் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநரின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், வட மாநிலத்தவர்களைப் பிடித்து தாக்கியுள்ளனர்.
ஒருவர் தப்பியோடிய நிலையில், ஒருவரை மட்டும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு அடிபட்ட ஆட்டோ ஓட்டுநரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவலறிந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் சேலையூர் காவல் நிலையம் முன் திரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: நெல்லையில் வழக்கறிஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு!