தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தங்களுக்கு முறையான பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். போராட்டம் நடைபெற்றாலும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்போம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்படும் பிற பணிகளை புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குனர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு சம்பளம் இல்லை எனக்கூறி அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் மருத்துவர்களின் போராட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிட்டவற்றில் இயல்பு நிலை பாதிக்கப்படும்.
எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு வராதவர்களுக்கு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படமாட்டாது. மருத்துவர்களின் அன்றாட பணிகள், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்களின் நலன், பயிற்சி, ஆலோசனைக் கூட்டம், மாற்றுப்பணி உள்ளிட்டவற்றிலும் பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவர்களின் போராட்டத்தின்போது பணிக்கு வராதவர்கள் விவரத்தையும், அரசு விதிகளின்படி பணிபுரிபவர்களின் விபரத்தையும் உடனடியாக அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்' - ஸ்டாலின்