தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் ஓதுவார்கள், அர்ச்சகர்கள் பணியில் அமர்ந்திருக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் தமிழ்நாடு அரசு ஆகம விதிகளை மீறுவதாக சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ஒடுக்கப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியது கருணாநிதியின் தவறு என்றால் அதே தவறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செய்வார்” என கூறியிருந்தார். சேகர்பாபுவின் இந்த கருத்துக்கும் சிலர் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் குறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதம் எழுந்தது.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பது பகுத்தறிவு சிங்கம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள். அதனை நீக்குவதற்கு கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தார்.
ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளையும் வழங்கியிருக்கிறோம்.
யாரையும் எந்த பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழஙக்ப்படவில்லை. அவ்வாறு ஆதாரத்துடன் தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். சமூக நீதியை பாழடிக்க இந்தத் திட்டத்தை சிலர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதை மக்கள் நன்கு அறிவார்கள்” என்றார்