ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுக்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ வல்லுநர் குழு, "இனிவரும் நாள்களில் கரோனாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாதபட்சத்தில் சென்னை, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் பொதுமக்கள் அச்சப்படாமல் அதனை எதிர்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் கரோனா நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.
தமிழ்நாட்டில் சமூகப் பரவல் என்பது இல்லை. பொய்யான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்.
சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்பதால் தீநுண்மி தொற்று பரவுகிறது, இருப்பினும் இறப்பு விழுக்காடு குறைவாக உள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா தீநுண்மி தொற்று குறைந்துள்ளது. கிராமங்களைக் காட்டிலும் நகரங்களிலேயே கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கக் கூடாது. தற்போது உள்ள சூழ்நிலையில் சென்னையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், திருமண மண்டபம் ஆகியவை இயங்க அனுமதி வழங்கப்படக் கூடாது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு =தான் முடிவெடுக்கும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர்கள் தளர்வுகளை ஏற்படுத்தக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்