சென்னை: தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் 11 கல்லூரிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மேலும், தேர்வு எழுதிய மாணவர்களில் 2 கல்லூரியிலிருந்து மட்டுமே 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 35 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019ஆம் கல்வி ஆண்டில் நவம்பர் பருவத் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் 11 கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளில் அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்வுகளில், கல்லூரி வாரியாக தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது.
அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பிஇ, பிடெக் பட்டப்படிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரிகள், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதம் நடைபெற்ற பருவ தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விபரத்தை annanin.edu என்ற இணையத்தில் வெளியிட்டுள்ளார்
அதில், 2019 நவம்பர் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துறை கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்விழியோ 3 ஆயிரத்து 073 மாணவர்களில் 2 ஆயிரத்து 331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விழுக்காடு 75.85 ஆக உள்ளது.
கிண்டி பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 228 மாணவர்களில் 3 ஆயிரத்து 033 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதந் தேர்ச்சி விழுக்காடு 71.74 சதவீதமாக உள்ளது.
அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலிருந்து தேர்வு எழுதிய ஆயிரத்து 914 மாணவர்களில், ஆயிரத்து 330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 69.49 என உள்ளது.
பிஇ, பிடெக் பட்டப்படிப்பை நடத்தும் 55 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய ஆயிர்தது 524 மாணவர்களில் ஆயிரத்து 396 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 91.60 சதவீதமாக உள்ளது.
தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், திருநெல்வேலி பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய ஆயிரத்து 143 மாணவர்களில் 508 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 44.44 சதவீதமாக இருக்கிறது.
அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 443 கல்லூரிகளில், 11 கல்லூரிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தேர்வு எழுதிய ஆயிரத்து 269 மாணவர்களில் ஆயிரத்து 63 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தேர்ச்சி சதவீதம் 83.77 ஆக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய 2 ஆயரித்து 479 மாணவர்களில் ஆயிரத்து 992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 80.35 சதவீதமாக தேர்ச்சி விகிதம் இருக்கிறது.
தேர்வெழுதிய மாணவர்களில் 80 சதவீதத்துக்கு மேல் 2 பொறியியல் கல்லூரிகள் பெற்றுள்ளன. 75 சதவீதத்துக்கும் மேல் 4 பொறியியல் கல்லூரிகள் பெற்றுள்ளன. 60 சதவீதத்துக்கு மேல் 27 பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 சதவீதம் மாணவர்கள் 57 கல்லூரிகளிலிருந்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.
166 கல்லூரிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 25 சதவீதம் முதல் 49 சதவீதம் வரையிலும், 139 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவாகவும், 80 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 10 சதவீதத்துக்கு குறைவாகவும் 47 பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 5 சதவீதம் குறைவாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
35 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 35 கல்லூரிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரி, தென்காசி ஏ. ஆர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, செங்கல்பட்டு பாலாஜி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அரியலூர் கே கே சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கிருஷ்ணகிரி ஓசூர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், தஞ்சாவூர் எஸ் எம் ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கன்னியாகுமரி இம்மானுவேல் அரசர் ஜேஜே காலேஜ் ஆப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப நிறுவனம், காஞ்சிபுரம் லார்டு வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் எஸ்ஆர்எஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பெரம்பலூர் எலிசபெத் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஆகிய 11 கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் மாணவர்கள் கல்லூரியின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை பார்த்து, சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்ய வசதியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் குறித்து விளம்பரம் செய்யவேண்டும்'- சென்னை உயர் நீதிமன்றம்!